
ஆஸ்கார் கொண்டாட்டங்கள் ஓரளவு முடிவடைந்து மக்கள் மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்பத்தொடங்கிவிட்டார்கள். நிஜம்தான், இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் அல்பாயுசுதான்.
ஆஸ்கார் நாயகன் சத்தமில்லாமல் அதே புன்னகையோடு வலம் வருகிறார். ஆஸ்கார் விருதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதே நாம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவர் முகத்தைத் துடைத்துக்கொண்டு வாழ்த்து அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், ஒரு ஜப்பானிய திரைப்படத்திற்கு ‘சிறந்த வேற்றுமொழிப்படம்’ விருது கிடைத்ததும் நண்பர்கள் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டனர். ‘ஸ்லம்டாக்’ படத்துக்கு எந்த வகையில் விருது கிடைத்தது? இந்தியாவில் எடுத்த படம்தானே என்று...
’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஹாலிவுட் இயக்குனரால் இந்தியாவில், இந்தியக்கலைஞர்களின் பங்களிப்புடன் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் என்று (தேடிப்பிடித்து)தீர்ப்பு எழுதுவதற்குள்(ஹி...ஹி...) மண்டை காய்ந்துவிட்டது. தப்பாக சொல்லிடக்கூடாது இல்லையா...?
இந்நிலையில், நாம் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர்களுக்காக பெருமைப்படலாமே ஒழிய, இந்தப்படத்துக்காக பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது என் கருத்து. இது மேற்கத்தியர்களுக்காக மேற்கத்தியப் பார்வையில் இந்தியாவைப்பற்றி எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லலாம். படம் முழுவதும் நம்மை மட்டம்தட்டியே எடுக்கப்பட்டதை உணரலாம். சொல்வதற்கில்லை, மேற்கத்தியர்கள், இந்தியாவை மட்டம் தட்டவே இதை இந்த அளவு எடுத்துச்சென்றிருக்கலாம். படத்தின் தலைப்பை மொழிபெயர்க்கப்போனால் “குப்பத்து நாய் கோடீஸ்வரனாகிறான்” என்ற சங்கடமான பொருள் கிடைக்கும்.
இதோ, ஜூ.வி.யில் இருந்து ஒரு முக்கியமான பேட்டி(சில பகுதிகள் மட்டும்)...
மும்பை குப்பங்களில் பெரியதாக இருக்கும் தாராவிவாசிகளில்
ஒருவரும், சமூக சேவைக்காக 'மகசேசே' விருது பெற்றவருமான ஜோக்கிங் அற்புதம் எனும் தமிழரிடம் பேசினோம். ''மும்பையில் குப்பங்கள் உருவானது எப்படி?''
''இதற்குக் காரணமே தமிழர்கள்தான். 1938-ல் ஒரு முறை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக மாவட்டத்தை விட்டே வெளியேறி, மகாராஷ்டிரா வந்தனர். இதில் பாதிப் பேர் சூரத்திலும் மீதிப் பேர் மும்பை நகரின் வெளிப்புறத்திலும் குடிசைகள் போட்டுத் தங்கினர். அப்போது காடாக இருந்த இங்கு, மலை சாதி மக்களுக்காக தாரா தேவி கோயில் இருந்தது. அதுவே, இந்தப் பகுதியின் பெயரானது. நாளடைவில் இந்தப் பெயர் மருவி, தாராவி என்று ஆனது. மற்ற மாநிலத்தவர்களும் தமிழர்களுடன் சேர்ந்துகொள்ள, ஆசியாவின் மிகப் பெரிய குப்பமாகி விட்டது தாராவி. சுமார் 520 ஏக்கர் பரப்புள்ள இங்கே 93 பகுதிகளைக் கொண்ட 3,600 குப்பங்கள் உள்ளன!''
''தாராவியை வைத்து எடுக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லியனர்' படம் பற்றி...''
''எங்கள் குப்பங்களைப் பற்றி அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அப்பட்டமான பொய்! குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதது போல சித்திரிக்கப்பட்டுள்ளதும் அதில் ஒன்று. 2001-ல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில், அதிக மார்க் வாங்கி பாஸ் செய்தவர், தாராவி குப்பத்துக்காரர்தான். தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனராக இருக்கும் எஸ்.எஸ்.ஷிண்டே உட்படப் பலர்
இந்தக் குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தற்போதுகூட இங்கு 46 எம்.பி.பி.எஸ், 38 இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளனர். மும்பையில் தென் இந்திய உணவு வகை களுக்குப் பிரசித்தி பெற்ற 'முத்துசாமி கேட்டரர்ஸ்' இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர் போல நியாயமாக, உழைத்துச் சம்பாதித்த ஏராளமான கோடீஸ்வரர்கள் இந்தக் குப்பத்துக்குச் சொந்தக்காரர்கள். ஏற்கெனவே, மீரா நாயர் தன்னுடைய 'சலாம் பாம்பே' படத்தில் மும்பைக் குப்பங்களைத் தவறாகச் சித்திரித்தார். அதையும் தாராவி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அது போலவே இந்தப் படத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.''
''படங்களில் காட்டப்படுவது போல் இங்கு உண்மை யிலேயே வறுமை நிலவுகிறதா?''
''நாங்கள் வறுமையாக இருப்பதாகச் சொல்லி உலக அளவில் நன்றாகக் கல்லா கட்டிவிட்டது அந்தப் படக்குழு. இந்தியாவிலேயே விலை குறைவான உணவு தாராவியில்தான் கிடைக்கும். வெறும் 15 ரூபாயில் மூன்று வேளையும் பசியாறிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு சுமார் எட்டு லட்சம் இட்லிகள் இங்கு தயாராகி, மும்பை முழுவதும் சப்ளையாகிறது. ஒரு நாய்கூட இங்கே பட்டினியால் செத்ததில்லை. இதனால்தான், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் இருந்து இன்றும் கூடப் பலர் தாராவிக்கு வந்து தங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். பசி, பட்டினியில் அடிபடவா இங்கே வருவார்கள்? சொல்லப் போனால், மும்பைவாசியினர் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்தக் குப்பங்களில்தான் கிடைக்கிறது!''
''ஆனால், தாராவியில் இன்னும் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படும் சூழல் நிலவுகிறதே?''
''இங்கே 10 வயது முதல் குப்பை பொறுக்கி விற்ற முகம்மது அலி என்ற சிறுவன், இன்று தாராவியின் கோடீஸ்வரர்களில் ஒருவர். இன்றும் சுமார் 300 குடும்பங்கள், அந்தக் குப்பைகளில் கிடைத்தவற்றை விற்று தினம் ரூபாய் 300 முதல் 1,000 வரை சம்பாதிக்கிறார்கள். அதே போல், இங்குள்ள பழைய பொருட்கள் சந்தையில் வாங்கப்படும் பிளாஸ்டிக்குகளை வைத்து, பி.வி.சி. பைப்புகளுக்கான மூலப் பொருட்கள் ஏராளமாகத் தயாராகின்றன. இது தடைப்பட்டால் பொருட்கள் கிடைக்காமல், இந்தியா முழுவதும் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துவிடும். அறுவை சிகிச்சையின்போது தையல் போடப் பயன்படும் ஒரு வகை நூல், இதே தாராவியிலிருந்துதான் 40 நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதனால் குப்பையைக் கூட தொழிலாக மாற்றிக் காட்டிய அதிசய பூமி இது!''
எப்படியோ, தமிழை ஆஸ்கார் மேடையேற்றிவிட்டோம்.
கொசுறு: இவ்வளவுகாலம் அமைதியாக இருந்த மலையாளிகள் தற்போது, ஏ.ஆர்.ரகுமானை சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார்கள். ஏ.ஆர்.ஆரின் தந்தை சேகர் கேரளாவைச் சேர்ந்தவர்.